×

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

பொன்னேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் சுற்றுவட்டார லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடங்கிய வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் லாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வதை ரத்து செய்ய வேண்டும், 40% காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், வடசென்னை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைத்து கொடுக்க வேண்டும், ஓட்டுநர்களுக்கு முறையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், நிலுவையில் உள்ள ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சுற்றுவட்டார அனைத்து வகை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதில் நேற்று முன்தினம் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றன. இந்தநிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் லாரி ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி 1 நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமாக மாற்றி, நேற்று முன்தினம் இரவு இந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் எனவும் லாரி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Chennai ,Dinakaran ,
× RELATED பொன்னேரியில் ஒருவர் வெட்டி கொலை..!!